ஒரே நாளில் 50 கோவில்களில் உழவாரப்பணி
தஞ்சை பெரியகோவில், மாரியம்மன்கோவில் உள்பட 50 கோவில்களில் ஒரே நாளில் உழவார பணி நடந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரியகோவில், மாரியம்மன்கோவில் உள்பட 50 கோவில்களில் ஒரே நாளில் உழவார பணி நடந்தது.
கோவில்களில் உழவாரப்பணி
தமிழகத்தில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு சென்று சென்னையில் உள்ள இறை பணி மன்றம் சுத்தம் செய்து உழவார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று 2 அல்லது 3 நாட்கள் தங்கி இந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தஞ்சைக்கு வந்த இறைபணி மன்றத்தினர் நேற்று காலை தஞ்சை பெரியகோவில் வளாகத்தில் உழவார பணி மேற்கொண்டனர். தஞ்சைக்கு இறைபணி மன்றத்தினர் 265 பேர் அதன் நிறுவனர் கணேசன் தலைமையில் வந்தனர். அவர்கள் பெரியகோவில் முழுவதும் புல், புதர்களை அகற்றி, குப்பைகளை சுத்தம் செய்து உழவார பணிகளை மேற்கொண்டனர்.
ஒரே நாளில் 50 கோவில்கள்
பின்னர் அவர்கள் தஞ்சையில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு 10 நபர்கள் வீதம் பிரித்து அனுப்பப்பட்டனர். அதன்படி தஞ்சை மேலவீதியில் உள்ள கொங்கணேஸ்வரர் கோவில், ராமர் கோவில், சங்கரநாராயணர் கோவில், மூலை அனுமார், ராஜகோபாலசாமி கோவில், வடபத்ரகாளியம்மன், கரந்தையில் உள்ள நீலமேகபெருமாள் உள்ளிட்ட தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட கோவில்கள் உள்பட 50 கோவில்களில் உழவார பணிகளை மேற்கொண்டனர். வழக்கமாக இவர்கள் ஒன்று அல்லது இரண்டு கோவில்களில் உழவார பணிகளை மேற்கொள்வர். ஆனால் தஞ்சையில் மட்டும் ஒரே நாளில் 50 கோவில்களில் உழவார பணிகளை மேற்கொண்டனர்.
தஞ்சை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜாபோன்ஸ்லே வழிகாட்டுதலின் பேரில் இந்த உழவாரப் பணியில் இறைப்பணி மன்றத்துடன் சேர்ந்து அழகிய தஞ்சை தஞ்சை இயக்கத்தினரும், உழவார பணிக்குழுவினரும் ஈடுபட்டனர். உழவாரப்பணிகளை மேற்கொண்ட பின்னர் அவர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்து மாலையில் உலக மக்கள் நன்மைக்காக கூட்டுப்பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
விழிப்புணர்வு ஊர்வலம்
முன்னதாக காலை 9 மணிக்கு பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் பெரிய கோவிலுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு துணிப்பை வழங்கப்பட்டது. இதையடுத்து பெரிய கோவிலில் இருந்து உழவாரப்பணியில் ஈடுபட்டவர்கள் விழிப்புணர்வு ஊர்வலத்திலும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
ஊர்வலத்திற்கு அழகிய தஞ்சை திட்ட இயக்குனர் ஆடிட்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார், மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், கவுன்சிலர் மேத்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், மாநகராட்சி மேலாளர் ஜெயக்குமார், சக்தி அழகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை தஞ்சை முதன்மை சார்பு நீதிபதி நாகராஜன் தொடங்கி வைத்தார்.
மரக்கன்றுகள் நடப்பட்டன
ஊர்வலம் சோழன்சிலை, ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலை, அண்ணாசிலை, பழைய பஸ் நிலையம், கீழராஜவீதி, தெற்கு வீதி, மேலவீதி, திலகர் திடல் வழியாக மீண்டும் பெரிய கோவிலை வந்தடைந்தது. பின்னர் தஞ்சை கலியுக வெங்கடேச பெருமாள் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.