பிளஸ்-1 தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது:91 மையங்களில் 19,398 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. 91 மையங்களில் 19,398 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 91 மையங்களில் பிளஸ்-1 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 19,398 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதினர். 1,184 பேர் தேர்வு எழுதவில்லை.
பிளஸ்-1 தேர்வு
தமிழகம் முழுவதும் பிளஸ்-1 பொதுத்தேர்வுகள் நேற்று தொடங்கின. தூத்துக்குடி மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில் 204 பள்ளிகளில் பயிலும் 8 ஆயிரத்து 617 மாணவர்களும், 10 ஆயிரத்து 801 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 20 ஆயிரத்து 582 பேர் இந்த தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதில் மொத்தம் 182 மாற்றுத்திறனாளிகளும் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.
கண்காணிப்பு
இத்தேர்வுக்காக மாவட்டத்தில் 44 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டு, 44 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வினாத்தாள் கட்டுகளை 23 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர். தேர்வில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 170 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும், 91 பேர் துறை அலுவலர்களாகவும், 91 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1,200 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மையங்களில் அதிகாரிகள் ஆய்வு
நேற்று பிளஸ்-1 தேர்வு எழுதுவதற்கு 1,184 மாணவ, மாணவிகள் வரவில்லை. இதனால் மொததம் 19 ஆயிரத்து 398 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு ஏப்ரல் 5-ந் தேதி வரை நடக்கிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்.ரெஜினி தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களுக்கு சென்று மாணவர்கள் தேர்வு எழுதியதை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.