ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு: 22 ஆயிரத்து 260 மாணவ- மாணவிகள் வெற்றி 73 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சி
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 260 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர். 73 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்து உள்ளன.
22,260 பேர் வெற்றி
தமிழ்நாடு முழுவதும் கடந்த மே மாதம் பிளஸ்-1 (11-ம் வகுப்பு) பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வை 24 ஆயிரத்து 162 மாணவ- மாணவிகள் எழுதி இருந்தனர். இதில் 22 ஆயிரத்து 260 பேர் வெற்றி பெற்று உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் 102 அரசு பள்ளிக்கூடங்கள், 2 நலத்துறை பள்ளிக்கூடங்கள், 6 நகராட்சி- மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், 12 அரசு நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 21 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 79 மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 1 நிதி உதவி பெறும் பள்ளி, 62 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள், 10 சுயநிதி பள்ளிக்கூடங்கள் என மொத்தம் 73 பள்ளிக்கூடங்கள் 100 சதவீதம் தேர்ச்சியை பதிவு செய்து உள்ளன.
12-வது இடம்
தமிழக அளவில் ஈரோடு மாவட்டம் 92.13 சதவீதம் வெற்றியை பதிவு செய்து, தேர்ச்சி விகிதத்தில் 12-வது இடத்தை பிடித்து உள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்விலும் ஈரோடு மாவட்டம் 12-வது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
102 அரசு பள்ளிக்கூடங்களில் படித்து வரும் 12 ஆயிரத்து 268 மாணவ- மாணவிகளில் 10 ஆயிரத்து 720 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 87.38 சதவீதமாகும். மாணவர்கள் 81.12 சதவீதமும், மாணவிகள் 92.51 சதவீதமும் தேர்ச்சி அடைந்து உள்ளனர். 2 நலத்துறை பள்ளிக்கூடங்களில் 131 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 108 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 82.44 சதவீதமாகும்.
நகராட்சி பள்ளிக்கூடங்கள்
6 நகராட்சி- மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் 726 பேர் தேர்வு எழுதியதில் 594 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றனர். அது 81.82 சதவீதமாகும். 12 நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் தேர்வு எழுதிய 2 ஆயிரத்து 60 பேரில் 1,908 பேர் வெற்றி பெற்றனர். இது 92.62 சதவீதமாகும். 21 சுயநிதி பள்ளிக்கூடங்களில் 1,998 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதியதில் 1,972 பேர் வெற்றி பெற்றனர். இது 98.70 சதவீதமாகும். 79 மெட்ரிக் பள்ளிக்கூடங்களில் 6 ஆயிரத்து 979 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில் 6 ஆயிரத்து 958 பேர் வெற்றி பெற்று உள்ளனர். இது 99.70 சதவீதமாகும்.
தேர்ச்சி விகிதத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிக்கூடங்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. அதுபோல் நலத்துறை பள்ளிக்கூடங்கள் 2 மட்டுமே உள்ளது. இங்கு மொத்தம் 131 பேர் தேர்வு எழுதியதில் 108 பேர் மட்டுமே வெற்றி பெற்று இருப்பது தேர்ச்சி விகிதத்தை குறையச்செய்து உள்ளது.
பாதிப்பு இல்லை
கொரோனா காரணமாக 100 சதவீதம் தேர்ச்சி வழங்கப்படும் என்று தவறாக நினைத்து பல மாணவ-மாணவிகள் தேர்வை சரியாக எழுதாமல் விட்டதால் தேர்ச்சி விகிதம் சரிந்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே பிளஸ்-2 வகுப்புகள் தொடங்கி விட்டதால், பிளஸ்-1 தேர்ச்சி பெறாத மாணவ- மாணவிகளும் உடனடியாக தேர்வு எழுதி, பிளஸ்-2 வகுப்பை தொடர முடியும். எனவே பாதிப்பு இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெருந்துறை கல்வி மாவட்டம்
கல்வி மாவட்ட அளவில் பெருந்துறை கல்வி மாவட்டம் பிளஸ்-1 வகுப்பிலும் அதிக தேர்ச்சியை கொடுத்து சாதனை படைத்து உள்ளது. இங்கு 12 அரசு பள்ளிக்கூடங்கள், 1 நிதி உதவி பெறும் பள்ளி, 3 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 11 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என 27 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 882 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 2 ஆயிரத்து 727 பேர் வெற்றி பெற்று 94.62 சதவீதம் தேர்ச்சி பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈரோடு கல்வி மாவட்டத்தில் 27 அரசு பள்ளிக்கூடங்கள், 3 மாநகராட்சி பள்ளிக்கூடங்கள், 7 நிதி உதவி பெறும் பள்ளிக்கூடங்கள், 4 சுய நிதி பள்ளிக்கூடங்கள், 35 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என 76 பள்ளிக்கூடங்களில் படித்த 8 ஆயிரத்து 685 பேரில், 8 ஆயிரத்து 135 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்று உள்ளனர். இது 93.67 சதவீதமாகும்.
பவானி கல்வி மாவட்டத்தில் 26 அரசு பள்ளிக்கூடங்கள், 1 நலத்துறை பள்ளி, 1 நிதி உதவி பள்ளி, 6 சுயநிதிப்பள்ளி, 10 மெட்ரிக் பள்ளி என 44 பள்ளிக்கூடங்களில் 5 ஆயிரத்து 208 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 4 ஆயிரத்து 693 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றனர். இது 90.11 சதவீதமாகும்.
கோபி-சத்தியமங்கலம்
கோபி கல்வி மாவட்டத்தில் 21 அரசு பள்ளிக்கூடங்கள், 3 நகரவை பள்ளிக்கூடங்கள், 3 நிதி உதவி பள்ளிக்கூடங்கள், 6 சுயநிதி பள்ளிக்கூடங்கள், 11 மெட்ரிக் பள்ளிக்கூடங்கள் என 44 பள்ளிக்கூடங்களில் 4 ஆயிரத்து 175 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதியதில், 3 ஆயிரத்து 863 பேர் வெற்றி பெற்றனர். இது 92.53 சதவீதமாகும். சத்தியமங்கலம் கல்வி மாவட்டத்தில் 16 அரசு பள்ளிக்கூடங்கள், 1 நலத்துறை பள்ளி, 2 சுயநிதி பள்ளிகள், 12 மெட்ரிக் பள்ளிகள் என 31 பள்ளிக்கூடங்களில் படித்த 3 ஆயிரத்து 212 மாணவ- மாணவிகளில் 2 ஆயிரத்து 852 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 88.79 சதவீதமாகும்.
வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கும், அந்தந்த பள்ளிக்கூடங்கள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவ- மாணவிகளுக்கும் ஆசிரிய- ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.