பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது
குமரி மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 22,918 பேர் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 160 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 பொதுத்தேர்வை 22,918 பேர் எழுதுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 160 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ்-2 பொதுத்தோ்வு
தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. தேர்வுகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வரை நடக்கிறது. குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தோ்வை 22 ஆயிரத்து 918 பேர் எழுதுகிறார்கள்.
அதாவது நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 88 பேரும், மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 830 பேரும் தேர்வை எழுதுகிறார்கள்.
நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 123 பள்ளிகளுக்கு 37 தேர்வு மையங்களும், ஒரு தனித் தேர்வு மையமும் அமைக்கப்பட்டுள்ளது. மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 133 பள்ளிகளுக்கு 45 தேர்வு மையங்களும், ஒரு தனித்தேர்வு மையமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 256 பள்ளிகளுக்கு 82 தேர்வு மையங்களும், 2 தனித் தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
பறக்கும் படை கண்காணிப்பு
தேர்வு இன்று நடைபெறுவதையொட்டி முன்னதாக தேர்வு மையங்களில் மாணவர்களின் ஹால்டிக்கெட் நம்பர் எழுதும் பணிகள் நடந்தன. நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் பொதுத்தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை கண்காணிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி தலைமையில் 160 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நிலையான பறக்கும் படையினர் 56 பேரும், பறக்கும் படை 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் நிலையான பறக்கும் படையினர் 56 பேரும், பறக்கும் படை 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். பறக்கும் படையினர் தேர்வு நடைபெறும் மையங்களில் ஆய்வு செய்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.