பிளஸ்-2 பொதுத்தேர்வு தொடங்கியது; 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர்
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
சென்னை,
2022-23-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனி தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 405 பள்ளிகளில் இருந்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.
இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 3 ஆயிரத்து 225 இடங்களில் இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 46 ஆயிரத்து 870 பேரும், மாணவர்கள் காப்பி அடிக்கிறார்களா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான படை உறுப்பினர்கள்4 ஆயிரத்து 235 பேரும் பணியில் ஈடுபட்டனர்.
உற்சாகமும், பரபரப்பும்...
காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க இருந்தாலும், பள்ளிகளுக்கு 8 மணி முதலே மாணவ-மாணவிகள் வரத்தொடங்கினர். சக மாணவர்களுடன் அமர்ந்து இறுதி நேர படிப்பை மேற்கொண்டனர். அதேவேளை ஆசிரியர்களை சந்தித்தும் தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டனர். தேர்வு தொடங்குவதற்கு முன்பாக பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பின்னர் உற்சாகமும், பரபரப்புமுமாக தேர்வு அறைக்குள் நுழைந்தனர்.
சரியாக 10 மணிக்கு புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புதாள்களுடன் முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் அதனை சரிபார்த்து கையொப்பமிட்டனர். முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை படித்து பார்ப்பதற்கும், அடுத்த 5 நிமிடங்கள் தேர்வர்களின் விவரங்களை சரிபார்ப்பதற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் காலை 10.15 மணிக்கு மாணவர்கள் தேர்வை எழுத தொடங்கினர். பின்னர் தொடர்ந்து 3 மணி நேரம் தேர்வை எழுதுவதற்கும் அவகாசம் வழங்கப்பட்டது.
பறக்கும் படையினர் கண்காணிப்பு
மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வை எழுதினர். அவ்வப்போது பறக்கும் படையினர், மாணவர்கள் யாராவது காப்பி அடிக்கிறார்களா? என்று கண்காணித்தனர். பறக்கும் படையினர் வரும்போது, நன்றாக எழுதும் மாணவர்கள் கூட பரபரப்பு கொண்டனர். இதனால் அவர்கள் வரும்போதெல்லாம் திரில்லர் படம் பார்ப்பது போலவே அமைந்தது.
முதல் நாளான நேற்று தமிழ் தாள் தேர்வு நடந்தது. நாளை (புதன்கிழமை) ஆங்கில தேர்வு நடக்கிறது. தொடர்ச்சியாக ஒவ்வொரு பாடப் பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்பட்டு, அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந் தேதி வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் ஆகிய தேர்வுகளுடன் பிளஸ்-2 பொதுத்தேர்வு நிறைவு பெற இருக்கிறது.
அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற உள்ளது. மே மாதம் 5-ந் தேதி தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2 மாணவர்கள் மீது நடவடிக்கை
நேற்று நடந்த தமிழ் தேர்வில் பள்ளி மாணவர்களாக 8 லட்சத்து 1,744 பேர் தேர்வை எழுதியதாகவும், 49 ஆயிரத்து 559 பேர் தேர்வு எழுதவில்லை என்றும், தனித்தேர்வர்களாக தேர்வு எழுத விண்ணப்பித்தோரில் 7 ஆயிரத்து 786 பேர் தேர்வை எழுதியதாகவும், 1,115 பேர் எழுதவில்லை என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இந்த தேர்வில் ஒழுங்கீன செயலில் ஈடுபட்டதாக வேலூரில் 2 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.