பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
ஆத்தூர் அருகே பள்ளி வகுப்பறையில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆத்தூர்:
பிளஸ்-2 மாணவர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள சதாசிவபுரம் கிழக்கு காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் மகுடப்பன். இவரது மனைவி பிரேமா. விவசாய தொழிலாளர்கள். இவர்களுக்கு கிரிநாத் (வயது 17) என்ற மகனும், சர்மிளா (15) என்ற மகளும் உள்ளனர்.
ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கிரிநாத் 12-ம் வகுப்பும், சதாசிவபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் சர்மிளா 10-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
தற்கொலை முயற்சி
இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு மாணவர் கிரிநாத் பள்ளியில் சிறப்பு வகுப்பு இருப்பதாக பெற்றோரிடம் கூறி விட்டு, பள்ளிக்கு வந்துள்ளார். பின்னர் பள்ளி வளாகத்தில் விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்த நிலையில் மயங்கி கிடந்தார். அப்போது பள்ளிக்கு வந்த சக மாணவர்கள், கிரிநாத் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே ஆசிரியர்கள் உதவியுடன், அவரை மீட்டு காட்டுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர். அதன்பிறகு மாணவர் கிரிநாத் ஆத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணை
மாணவர் கிரிநாத் தற்கொலை முயற்சிக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து ஆத்தூர் ரூரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.