பிளஸ்-2 மாணவி, காதலனுடன் தற்கொலை
சேலம் அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், பிளஸ்-2 மாணவி காதலனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள வீரக்கல் செம்மண்ணன் காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் புதியன் குமார் (வயது 26), டிரைவர். அதே பகுதியை சேர்ந்த முருகன் மகள் யுவஸ்ரீ (17). இவர் நங்கவள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் ஒரே ஊர் என்பதால் புதியன்குமாருக்கும், மாணவி யுவஸ்ரீக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனால் ஒருவரை, ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.
விஷ மாத்திரை
இதனிடையே இவர்களது காதலை அறிந்த யுவஸ்ரீயின் தந்தை முருகன், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை கண்டித்துள்ளார். இதனால் யுவஸ்ரீ மனவிரக்தியுடன் காணப்பட்டார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் புதியன்குமாரும், யுவஸ்ரீயும் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியேறினர். பின்னர் வீட்டின் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றனர். அங்கு புதியன்குமார் வாங்கி வைத்திருந்த விஷ மாத்திரையை சாப்பிட்டனர். அதாவது யுவஸ்ரீ 3 மாத்திரைகளையும், புதியன்குமார் 4 மாத்திரைகளையும் சாப்பிட்டு விட்டனர்.
2 பேரும் சாவு
பின்னர் இதுகுறித்து யுவஸ்ரீ தனது தந்தைக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக தந்தை முருகன் மற்றும் அக்கம்பக்கத்தினர் சென்று புதியன்குமாரையும், யுவஸ்ரீயையும் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புதியன் குமார் நள்ளிரவில் உயிரிழந்தார். மேலும் தீவிர சிகிச்சையில் இருந்த யுவஸ்ரீ நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.