விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி சாவு
தோகைமலை அருகே விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-2 மாணவி
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி கம்பிலிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2-வது மகள் பரிமளா (வயது 17). இவர் கீழவெளியூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 28-ந்தேதி தோட்டத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.
சாவு
இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிமளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.