உவரி கடலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி


உவரி கடலில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் பலி
x

நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு உவரி கடலில் நண்பர்களுடன் குளித்த பிளஸ்-2 மாணவர் ராட்சத அலையில் சிக்கி மூழ்கியதில் இறந்தார்.

திருநெல்வேலி

திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உப்பச்சம்பாட்டை சேர்ந்தவர் திருமால். இவருடைய மகன் மதன் (வயது 17). இவர் திசையன்விளையை அடுத்த அரசூர் பூச்சிக்காட்டில் வசித்து வந்தார். மதன் இடையன்குடியில் உள்ள கால்டுவெல் நூற்றாண்டு நினைவு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

நேற்று முன்தினம் மதன் உடன் படிக்கும் மாணவர் நவின் என்பவரின் பிறந்த நாள் ஆகும். பிறந்த நாளை கொண்டாடிவிட்டு மாலை நேரத்தில் நவீன் அவருடைய நண்பர்கள் உவரியை சேர்ந்த செல்வன் (16), கிஷோர் (17), சுகன் (18) ஆகியோருடன் உவரி கடலில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது ராட்சத அலை பாய்ந்து வந்தது. அந்த அலையில் சிக்கிய மதன் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினார். இதை பார்த்து திடுக்கிட்ட அவருடைய நண்பர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று மதனை மீட்டனர். பின்னர் ஆட்டோவில் ஏற்றி திசையன்விளையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் மாணவர் மதன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து உவரி கடலோர காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். நண்பனின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு கடலில் குளித்த மாணவர் தனது நண்பர்களின் கண்எதிரே கடலில் மூழ்கியதில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story