அரசு பஸ் மீது மோட்டாா் சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலி


அரசு பஸ் மீது மோட்டாா் சைக்கிள் மோதி பிளஸ்-2 மாணவர் பலி
x

பெரம்பலூரில் அரசு பஸ் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பெரம்பலூர்

பிளஸ்-2 மாணவர்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் பெரியார் நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவர், திருச்சி உறையூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனை பெரம்பலூர் கிளையில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு முகேஷ் (வயது 18) என்ற மகனும், அபர்ணா என்ற மகளும் உள்ளனர். முகேஷ் செட்டிகுளம் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து அரசு பொதுத் தேர்வு எழுதியுள்ளார்.

இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் நித்திஷ் (13) பாடாலூர் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் ஆங்கில தேர்வு என்பதால் முகேஷ் நேற்று நித்திஷை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளார். அவர்கள் பெரம்பலூர் நான்கு ரோட்டில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி சென்ற போது, முன்னாள் சென்று கொண்டிருந்த அரசு பஸ்சை முந்த முயன்றனர். அப்போது முகேசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அரசு பஸ்சின் மீது மோதியது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதில் படுகாயமடைந்த முகேஷ், நித்திஷ் ஆகிய 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் முகேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நித்திசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story