பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலி
அய்யம்பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலியானார். முதல் நாள் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
அய்யம்பேட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் பிளஸ்-2 மாணவி, சகோதரனுடன் பலியானார். முதல் நாள் தேர்வு எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பியபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
பிளஸ்-2 மாணவி
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே தாழக்குடி மேலத்தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் விஷாலி(வயது 17). இவர், அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று தொடங்கிய பிளஸ்-2 தமிழ் தாள் தேர்வு எழுத விஷாலி பள்ளிக்கு வந்தார். தேர்வு எழுதி விட்டு மீண்டும் அடுத்த தேர்வுக்காக தொடர்ந்து அதே பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார்.
மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியது
நேற்று மாலை விஷாலியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அதே ஊரைச்சேர்ந்த அவருடைய சித்தப்பா மகன் பிரதீப்(23), (இவர் டிப்ளமோ படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்) மோட்டார் சைக்கிளில் விஷாலி படிக்கும் பள்ளிக்கு வந்தார்.
அங்கிருந்து புறப்பட்டு அவர்கள் இருவரும் மோட்டார் சைக்களில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் நல்லிச்சேரி பிரிவு சாலை அருகே சென்றபோது திடீரென நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது.
2 பேரும் பரிதாப பலி
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து விஷாலி, பிரதீப் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அய்யம்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் ஆகியோர் விபத்து நடந்த இடத்துக்கு சென்றனர்.
பின்னர் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்தவுடன் இருவரின் உறவினர்கள், விஷாலி படித்த பள்ளியின் ஆசிரியைகள், சக மாணவிகள் சம்பவ இடத்திற்கு வந்து இருவரின் உடல்களையும் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
சோகம்
தேர்வு எழுதி விட்டு வீடு திரும்பிய மாணவி சகோதரனுடன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விபத்து காரணமாக தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.