ஸ்ரீமுஷ்ணம் அருகே பஸ் நிறுத்தத்தில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக்கொலை ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் என்ஜினீயர் வெறிச்செயல்
ஸ்ரீமுஷ்ணம் அருகே ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் பிளஸ்-2 மாணவரை கத்தியால் குத்திக் கொலை செய்த என்ஜினீயரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல்புளியங்குடி பழைய காலனியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி சீதாலட்சுமி. இந்த தம்பதிக்கு ஜீவா (வயது 17) என்ற மகன் இருந்தான். இவர், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
ஜீவாவும், அதே கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (22) என்பவரும் நண்பர்கள். என்ஜினீயரான ஆனந்த், மின்சார வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றினார். தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.
ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு
கடந்த 6 மாதத்திற்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய போது ஜீவாவின், காலில் அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. அதன்பிறகு ஆனந்த், அவ்வப்போது ஜீவாவை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்று வந்துள்ளார்.
சம்பவத்தன்று ஜீவாவை தனது வீட்டுக்கு அழைத்து சென்ற ஆனந்த், அவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக தெரிகிறது. அதற்கு மறுத்த ஜீவா, கதவை திறந்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
புகைப்படத்தை காண்பித்து மிரட்டல்
சமீபத்தில் நடந்த கோவில் திருவிழாவின்போது ஜீவா, ஒரு மாணவியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதைபாா்த்த ஆனந்த், அதை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பின்னர் அதை காண்பித்து ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காவிட்டால் இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவேன் என்று ஆனந்த் மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ஜீவா, ஆனந்திடம் இருந்த செல்போனை பிடுங்கி உடைத்தார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
குத்திக் கொலை
இந்நிலையில் நேற்று காலை பள்ளிக்கூடம் செல்வதற்காக ஜீவா, ஸ்ரீமுஷ்ணம்- விருத்தாசலம் சாலையில் பெலாந்துறை வாய்க்கால் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
அப்போது ஜீவா, ஸ்ரீமுஷ்ணம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் தனது நண்பா் பிரித்திவிராஜியுடன், சிறுநீர் கழிக்க சென்றார். அந்த சமயத்தில் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த ஆனந்த், ஜீவாவிடம் உடைத்த தனது செல்போனுக்கு பதிலாக புதிய செல்போன் எப்போது வாங்கித் தருவாய்? என்று கேட்டுள்ளார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆனந்த், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஜீவாவை சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜீவா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
கூச்சலிட்ட நண்பர்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரிதிவிராஜ் கூச்சலிட்டார். உடனே ஆனந்த், கத்தியால் அவரது கையில் கிழித்து விட்டு தான் வந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றார். இதில் பிரிதிவிராஜிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் விரைந்து வந்து, பலியான ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
என்ஜினீயருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின் பேரில் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதுடன், தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் பஸ் நிறுத்தத்தில் பள்ளி மாணவர், கொடூரமாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.