பள்ளியில் நண்பர்களுடன் குடிக்க சாராயத்துடன் வந்த பிளஸ்-2 மாணவர்


பள்ளியில் நண்பர்களுடன் குடிக்க சாராயத்துடன் வந்த பிளஸ்-2 மாணவர்
x

கல்வராயன்மலை பள்ளியில் நண்பர்களுடன் குடிக்க பிளஸ்-2 மாணவர் சாராயத்துடன் வந்தார். புத்தகப்பையை சோதனை செய்த ஆசிரியர் அதிர்ச்சி அடைந்தார்.

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

சம்பவத்தன்று இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர் ஒருவரின் புத்தகப் பையை ஆசிரியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார். அப்போது அதில் ஒரு லிட்டர் சாராய பாக்கெட் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நண்பர்களுடன் குடிக்க...

இதையடுத்து அவர் அந்த மாணவரிடம் சாராயம் குறித்து விசாரணை நடத்தினார். இதில் அந்த மாணவர், தான் ரூ.100 கொடுத்து ஒருவரிடம் இருந்து ஒரு லிட்டர் சாராயத்தை வாங்கி வந்ததாகவும், அதனை நானும், நண்பர்களான சக மாணவர்கள் 2 பேரும் சேர்ந்து குடிக்க முடிவு செய்து இருந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட 3 மாணவர்களின் பெற்றோரையும் பள்ளிக்கு வரவழைத்தனர். பின்னர் அவர்களிடம், மாணவர்கள் செய்த தவறு பற்றி விளக்கி கூறினர்.

3 மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ்

மேலும் இந்த மாணவர்களால் பிற மாணவர்களும் கெட்டுப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உங்களின் மகன்களை இந்த பள்ளியில் இனி படிக்க அனுமதிக்க முடியாது என்றும், 3 மாணவர்களுக்கான மாற்றுச்சான்றிதழை(டி.சி.) பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் வழங்கினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர் எங்கள் மகன்கள் தவறு செய்து இருக்க மாட்டார்கள் என கூறி பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களின் மாற்றுச்சான்றிதழை பெற்றோரிடம் வழங்கினர். மாணவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Next Story