தமிழ்நாட்டில் பயங்கரவாதம் உள்ளது... தமிழ்நாட்டில் வெற்றிடத்தை பிரதமர் மோடி நிரப்புவார் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிகப்பெரிய அளவில் படர்ந்துள்ளது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஏ.என்.ஐ. செய்தி முகமைக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியின் முழு தொகுப்பு நாளை வெளியாக உள்ளது.
இந்நிலையில், அந்த பேட்டி தொடர்பான சில காட்சிகளை ஏ.என்.ஐ. செய்தி முகமை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
1 நிமிடம் ஒளிபரப்பாகியுள்ள அந்த பேட்டியின் சில காட்சிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-
தமிழ்நாடு மிகவும் பாதுகாப்பான மாநிலம், தமிழ்நாட்டில் நீங்கள் சட்டம்-ஒழுங்கு போன்ற பிரச்சினைகளை பார்க்கமாட்டீர்கள் என கூறுபவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், தமிழ்நாட்டில் பயங்கரவாதம் உள்ளது.... பயங்கரவாத தொகுப்புகள் மிகவும் வலுவாக உள்ளன.... தமிழ்நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிகப்பெரிய அளவில் படர்ந்துள்ளது....
தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய வெற்றிடத்தை பிரதமர் மோடி நிரப்புவார் என்று நாங்கள் அடிப்படையில் நம்புகிறோம். 2024-ல் மோடி ஜியின் அலை உள்ளதாக நாங்கள் உறுதியாக பார்க்கிறோம்...
2024-ம் ஆண்டு என்பது பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்கள் உடனானது என்றே நான் பார்க்கிறேன்... இந்திய அரசியலில் முதல் முறையாக எதிராக (Versus) என்ற நிலை ஏற்படப்போவதில்லை... இது மோடி ஜி மற்றும் இந்திய மக்கள்... வாக்களிக்கும் மக்கள்...
பிரதமர் மோடியுடன் ஒப்பிட முதல்-அமைச்சர் முக ஸ்டாலின் என்ன மதிப்பு (Stature) கொண்டுள்ளார்?...
திமுகவினரிடம் பேசினீர்களானால் தமிழ்நாட்டில் மோடியை விட முக ஸ்டாலின் அதிக மதிப்பு கொண்டவர் என்று நிச்சயம் கூறுவார்கள் என்று செய்தியாளர் கூறினார்.
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, திமுக கட்சியினருக்கு அவ்வாறு இருக்கலாம். ஆனால், பிரதமர் மோடியுடன் முதல்-அமைச்சர் முக ஸ்டாலினை ஒப்பிடுவதை சராசரி தமிழன் ஏற்றுக்கொள்ளமாட்டார்.
அவ்வாறு திமுக ஒப்பிட்டால் அது தமிழ்நாட்டு பாஜகவுக்கு அவர்கள் கொடுக்கும் ஒரு சிறந்த பரிசு. அவ்வாறு அவர்கள் ஒப்பிட்டால், நாங்கள் 10 சதவிகிதத்திற்கு கூடுதலாக வாக்கு வங்கியை பெறத்தொடங்கிவிட்டோம்...' என்றார்.