பா.ம.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை - அன்புமணி ராமதாஸ்
பா.ம.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
மயிலாடுதுறையில் நடந்த பா.ம.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தொடங்கப்படும் புதிய தனியார் தொழில் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் வேலை வழங்குவதற்கான தனி சட்டத்தை சட்டசபையில் கொண்டுவர வேண்டும்.டெல்டா மாவட்டங்களில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதை தடுப்பதற்கு தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். போதை பொருள் தடுப்பு பிரிவில் போதுமான போலீசார் இல்லாததால் இந்த குற்றங்கள் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அதனால் போதை தடுப்பு பிரிவுக்கு 20 ஆயிரம் போலீசாரை பணியமர்த்த வேண்டும். இல்லையென்றால் இளைய சமுதாயம் சீரழிந்துவிடும்.பா.ம.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை. கடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட பா.ம.க. தனித்துதான் போட்டியிட்டது. பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்திருப்பது ஏற்புடையது அல்ல. தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு 100 சதவீதம் வழங்குவதற்கு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.