தச்சுதொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
கயத்தாறு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த தச்சுதொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கயத்தாறு:
கயத்தாறு தாலுகாவைச் சேர்ந்த புங்கவர்நத்தம் கிராமத்தை சேர்ந்த தச்சு தொழிலாளிக்கு 2 மனைவிகள். இருவருடன் ஒரே வீட்டில் அவர் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதல் மனைவி இவரை விட்டு பிரிந்த சென்றார். தற்போது 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும், 2-வதாக இரட்டை குழந்தைகளில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் என 3 பேர் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு 15 வயதாகிறது. இவர் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பெற்ற மகள் என்றும் பாராமல் கடந்த ஓராண்டாக அந்த சிறுமிக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து தாயாரிடம் சொன்னால் சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்று விடுவதாக மிரட்டி வந்துள்ளார். இதனால் சிறுமி பயத்தில் வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகளுக்கு கணவர் பாலியல் தொல்லை செய்வதை சிறுமியின் தாயார் நேரில் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமியுடன் சென்று அவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.