போகிப்பண்டிகையை புகை இல்லாமல் கொண்டாட வேண்டும்


போகிப்பண்டிகையன்று பொதுமக்கள் தேவையற்ற பொருட்களை தீயிலிட்டு எரிக்காமல் புகையில்லாமல் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காற்று மாசு

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதற்கு முந்தையநாளை நாம் போகி பண்டிகையாக கொண்டாடுகிறோம். அந்த நாளில் பழைய பொருட்களை எரிப்பது என்பது பழையன கழிதல் என்ற வழக்கிற்கான அடையாளமாகும். கிழிந்த பாய்கள், துணிகள், தேய்ந்த துடைப்பான்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் உள்ளிட்டவற்றை தீயிட்டு கொளுத்துவார்கள்.

பெரும்பாலும் கிராமங்களில் கடைபிடிக்கப்படும் இந்த பழக்கம் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தாத ஒன்றாகும். ஆனால் தற்போது போகி தினத்தன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை எரிக்கும்போது நச்சுப்புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண் மற்றும் மூக்கு பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. புகையினால் காற்று மாசுபட்டு நாம் வசிக்கும் நகரம் கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சாலை போக்குவரத்து தடை ஏற்படுகிறது.

புகையில்லா போகிப்பண்டிகை

இதுபோன்ற செயல்கள் மூலம் காற்று மாசுபடுகிறது. பழைய மரம், வறட்டி தவிர மற்றவற்றை எரிப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

போகிப்பண்டிகையன்று குப்பைகளை திடக்கழிவுடன் சேர்த்து அப்புறப்படுத்தி பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் காற்று மாசு இல்லாமல் கொண்டாட அனைவரும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

புகையில்லா போகிப்பண்டிகை கொண்டாட பொதுமக்களுக்கு தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதன்படி புகையில்லாமல் போகிப்பண்டிகை கொண்டாடவும், தங்களுக்கு தேவையில்லாத பொருட்களை ஆங்காங்கே தீயிலிட்டு எரிக்காமல் வீடு, வீடாக குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவும், அதன் மூலமாக நமது நகரை காற்று மாசுபடுவதில் இருந்து பாதுகாத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Next Story