குடிநீர் தொட்டிகளில் விஷம் கலந்து எங்களை கொன்றுவிட்டு நிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள்
நெய்வேலி என்.எல்.சி. சுரங்க விரிவாக்க பணிக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குடிநீர் தொட்டிகளில் விஷம் கலந்து எங்களை கொன்றுவிட்டு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பொதுமக்கள் ஆவேசமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மந்தாரக்குப்பம்,
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் 3 நிலக்கரி சுரங்கங்கள் உள்ளன. இதில் 1-வது சுரங்க விரிவாக்கத்திற்காக மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உட்பட்ட முதல் 3 வார்டுகளில் உள்ள நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி. முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், அந்தபகுதியில் வசித்து வரும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சில கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைதி பேச்சுவார்த்தை
மேலும் இந்த விவகாரத்தில் தீர்வுகாணும் வகையில் தாசில்தார் பாலராமன் தலைமையில் கங்கைகொண்டான் பேரூராட்சியில் பொதுமக்களிடம் கருத்து கேட்பு மற்றும் சமாதான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மந்தாரக்குப்பம் மலர்விழி, தொ்மல் லதா, ஓய்வுபெற்ற சப்-கலெக்டர் தினேஷ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தாசில்தார் பலராமன் பேசுகையில், என்.எல்.சி.க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 5 சென்ட் நிலத்தில் ரூ.23 லட்சத்து 60 ஆயிரத்தில் வீடு கட்டி தரப்படும், குடும்பத்தில் ஒருவருக்கு ஒப்பந்த வேலை, வேலை வேண்டாம் என்று தெரிவிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை ஒரே தவணையாக வழங்கப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
இதற்கு பொதுமக்கள் பதிலளித்து கூறுகையில், கடந்த 65 ஆண்டுகளுக்கு மேலாக 60-க்கும் மேற்பட்ட கிராமங்களை என்.எல்.சி.க்கு வழங்கி உள்ளோம். அவ்வாறு இடம் வழங்கி வெளியே குடியிருந்து வருபவர்களுக்கு, அவர்களிடம் நிலம் கையகப்படுத்தியபோது சொன்ன வாக்குறுதியை இதுவரைக்கும் என்.எல்.சி. நிர்வாகம் நிறைவேற்றவில்லை. எனவே இனியும் என்.எல்.சி.க்கு, நாங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளை வழங்க முடியாது.
இருப்பினும் நிலத்தை கையகப்படுத்தும் பட்சத்தில் மீழ்குடியேற்றம் மற்றும் மறுவாழ்வு (ஆர் அண்டு ஆர்) சட்டத்தின் அடிப்படையில் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
நிரந்தர வேலை தேவை
எங்கள் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக நிலத்தின் மதிப்பை நிறுத்தி வைத்துள்ளனர். இதை எடுத்து விட வேண்டும். அப்போது தான் எங்களது நிலத்தின் மதிப்பு என்ன என்று எங்களுக்கு தெரியவரும். எனவே இதை முதலில் நீக்க வேண்டும்.
எங்களுக்கு என்.எல்.சி.யில் நிபந்தனையற்ற வேலை வழங்க வேண்டும். வேலைக்கான உத்தரவு ஆணையை மாவட்ட கலெக்டர் மூலமாக வழங்க வேண்டும். வேலை வழங்கிய பின்னர் பயிற்சி தர வேண்டும். பயிற்சி அளித்து வேலை என்கிற நிலை வேண்டாம்.
ஏனெனில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு 42 ஆண்டுகளுக்கு முன் வீடு, நிலம் கொடுத்து விட்டு இன்று வரையில் மக்களாகிய நாங்கள் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறோம். நிரந்தர வேலை இல்லையென்றால் எங்கள் இடம் என்.எல்.சி.க்கு இல்லை.
கடந்த கொரோனா காலத்தில் 74 பேருக்கு எந்தவித தகுதி தேர்வும் இல்லாமல் கருணையின் அடிப்படையில் பணி வழங்கியது போன்று, எங்களுக்கும் கருணை அடிப்படையில் நிரந்தர வேலை வழங்க வேண்டும்.
ஏக்கருக்கு ஒரு கோடி ரூபாய்
ஒடிசா மாநிலத்தில் மத்திய அரசு நிறுவனமான எம்.சி.எல். நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு வழங்கும் நிதியை போன்று எங்களுக்கும் தரவேண்டும். மேலும் ஒரு ஏக்கருக்கு ஒரு கோடி, ஒரு குடும்பத்தில் கூட்டு பட்டாவில் 4 பேர் இருக்குமேயானால் அவர்கள் அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்க வேண்டும். இவ்வாறு எங்களது கோரிக்கைகள் முழுவதையும் நிறைவேற்றினால் தான் நிலத்தை தருவோம்.
எங்களை நிர்பந்தித்து நிலத்தை எடுக்கின்ற சூழல் ஏற்பட்டால், நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை ஒன்றை வைக்கிறோம். அது என்னவென்றால், எங்கள் பகுதியில் 2 மேல்நிலை குடிநீர் தொட்டி இருக்கிறது. அதில் விஷம் கலந்து விட்டால், அதை இங்குள்ள அனைத்து மக்களும் குடித்துவிட்டு இறந்து விடுவோம். அதன் பின் எங்கள் பகுதியை சுலபமாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஆவேசமாக கூறினர்.
பாதியில் வெளியேறிய அதிகாரிகள்
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக கூட்டத்தை முடித்துக்கொண்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கூட்டத்தில், பேரூராட்சி தலைவர் பரிதாஅபாஸ், துணைத்தலைவர் பெலிக்ஸ், வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.