பொக்லைன் ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை
கள்ளத்தொடர்பை கண்டித்ததால் விரக்தி அடைந்த பொக்லைன் ஆபரேட்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பெண்ணுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி:
பண்ருட்டி தாலுகா நடுக்காட்டுப்பாளையம் காளிகோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 27). பொக்லைன் எந்திர ஆபரேட்டர். இவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்ததால் அதே பகுதியில் வசித்து வந்த உறவினர் ருக்மணி என்பவரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.
இந்த நிலையில் ருக்மணியின் மகனான லாரி டிரைவர் அழகேசன் மனைவி ராஜேஸ்வரி(40) என்பவருக்கும், ரவிச்சந்திரனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த அழகேசன் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.
விஷம் குடித்து தற்கொலை
இதனால் விரக்தி அடைந்த இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். அதன்படி சம்பவத்தன்று இரவு ராஜேஸ்வரி வீட்டில் வைத்தும், ரவிச்சந்திரன் அருகில் உள்ள தோட்டத்தில் வைத்தும் விஷம் குடித்தனர். இதில் மயங்கி விழுந்த ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதற்கிடையே மயங்கி விழுந்த ராஜேஸ்வரியை அவரது கணவர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து ரவிச்சந்திரனின் அண்ணன் ரவிசங்கர் கொடுத்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.