ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இன்று போலீசாருக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் நடக்கிறது


ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இன்று போலீசாருக்கு பணியிடமாறுதல் கலந்தாய்வு; போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் நடக்கிறது
x

ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) போலீசாருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் நடக்கிறது.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முதல் முறையாக இன்று (வெள்ளிக்கிழமை) போலீசாருக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் நடக்கிறது.

போலீசாருக்கு பணியிட மாறுதல்

காவல்துறையில் பணியாற்றி வரும் முதல் நிலை, 2-ம் நிலை, தலைமைக்காவலர் (ஏட்டு), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகிய போலீசாருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாறுதல் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் பணி செய்து வரும் சுமார் 300 போலீசார் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு வழக்கமான பொது பணியிட மாறுதல் வழங்கப்படும் என்று எதிர்பார்த்து இருந்தனர்.

இந்தநிலையில் ஈரோடு மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி வந்த போலீசார் முதல் கட்டமாக கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக பல்வேறு போலீஸ் நிலையங்களிலும் பணியாற்றிவந்தவர்கள் மதுவிலக்கு போலீஸ் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். அதைத்தொடர்ந்து நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பேரில் போலீசாருக்கு பணியிட மாறுதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல ஆண்டுகளாக முகாம் அலுவலகங்களில் பணியாற்றி வந்த போலீசாரும் வெவ்வேறு துணைக்கோட்டங்களுக்கு மாறுதல் பெற்றனர்.

இன்று கலந்தாய்வு

அதைத்தொடர்ந்து பொது மாறுதல் அளிக்கப்பட உள்ளது. இதுவரை பொதுமாறுதல் நடைமுறை என்பது, மாறுதல் வழங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்பு போலீசாரிடம் விருப்ப விண்ணப்பம் பெறப்படும். அதில் போலீசார் மாறுதல் விரும்பும் ஏதேனும் 3 போலீஸ் நிலையங்களின் பட்டியலை வழங்குவார்கள். இந்த பட்டியல் அதிகாரிகளின் ஆய்வுக்கு பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஒப்புதலுடன் பணியிட மாற்றம் வழங்கப்பட்டு, ஒட்டு மொத்தமாக பட்டியல் வெளியிடப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கலந்தாய்வு (கவுன்சிலிங்) முறையில் பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் அறிவித்து உள்ளார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பொது பணியிட மாறுதலுக்கு காத்திருக்கும் சுமார் 300 போலீசாருக்கு ஆனைக்கல்பாளையத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் கலந்தாய்வு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரை, காலை 10 மணி முதல் பகல் 12 மணிவரை, பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை என 3 கட்டங்களாக இந்த கலந்தாய்வு நடக்கிறது.

போலீஸ் சூப்பிரண்டு

போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் முன்னிலையில் போலீஸ் அதிகாரிகள் இந்த கலந்தாய்வினை நடத்துகிறார்கள். போலீசார் தாங்கள் தற்போது பணியாற்றும் காவல் கோட்டத்துக்கு வெளியே உள்ள பிற கோட்டங்களில் தங்கள் புதிய பணியிடத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

தற்போது பணியாற்றும் துணைக்கோட்டத்தில் மீண்டும் பணி செய்ய விரும்பினால், அவர்கள் விரும்பும் போலீஸ் நிலையத்தில் இதற்கு முன்பு பணியாற்றி இருக்கக்கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த கலந்தாய்வு நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் போலீசாருக்கு பொது பணியிட மாறுதல் முதன் முறையாக கலந்தாய்வு முறையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது.


Next Story