போதைப் பொருட்களை தடுக்க ஊராட்சி மன்ற தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-போலீஸ் சூப்பிரண்டு வலியுறுத்தல்
தர்மபுரி:
போதைப் பொருட்களை தடுக்க அந்தந்த பகுதி ஊராட்சி மன்ற தலைவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் வலியுறுத்தினார்.
விழிப்புணர்வு கூட்டம்
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான போதைப்பொருட்கள் தடுப்பு தொடர்பான நல்லுரவு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் ஆட்டுக்காரன்பட்டியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் போதைப்பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதனை தடுப்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் விவாதித்தனர்.
கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் போதைப் பொருட்களை முற்றிலுமாக தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பொருட்களால் எதிர்கால சமூகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். எனவே அந்தந்த கிராமங்களில் போதை பொருட்கள் நடமாட்டம் இருப்பது தெரிய வந்தால் ஊராட்சி மன்ற தலைவர்கள் காவல்துறை கவனத்திற்கு கொண்டு வர வேண்டும். இதனை முழுமையாக தடுக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறினார்.
உறுதிமொழி ஏற்பு
இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாமலை, இளங்கோ, குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.