தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்-பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்-பொதுமக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு
x
தினத்தந்தி 24 Oct 2022 12:15 AM IST (Updated: 24 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களை தீவிரமாக கண்காணித்துவருகிறார்கள்.

தீபாவளி பண்டிகை

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இன்று (திங்கட்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) கேதார கவுரி விரதம் என்னும் நோன்பு விழா கொண்டாடப்படுகிறது. இவற்றை முன்னிட்டு புத்தாடைகள், பட்டாசு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளில் குவிந்து வருகிறார்கள்.

இதனால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில் தர்மபுரி மாவட்டம் முழுவதும் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை நாளில் மோதல் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஆங்காங்கே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கேதார கவுரி விரதத்துக்கு தேவையான பூஜை பொருட்கள் வாங்குவதற்காக ஏராளமான பெண்கள் கடைவீதிகளுக்கு வருவார்கள் என்பதால் அந்த பகுதியிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சினிமா தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

கோவில்களுக்கு பாதுகாப்பு

இதேபோன்று மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை கேதார கவுரி விரதம் இருக்கும் பெண்கள் குடும்பத்துடன் அந்தந்த பகுதி கோவில்களுக்கு செல்வார்கள். நகைப்பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும் தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் தகராறுகள், மது போதையில் ஏற்படும் தகராறுகள் உள்ளிட்ட சிறு சிறு சம்பவங்களை தடுக்க சிறப்புப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் தர்மபுரி நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில்லா தீபாவளி

பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை விபத்து இல்லாமல் பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

ஒத்துழைப்பு

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த தீபாவளி பண்டிகையை விபத்தில்லா பண்டிகையாக கொண்டாட அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Next Story