2 தனிப்படை அமைத்து விசாரணை


2 தனிப்படை அமைத்து விசாரணை
x
திருப்பூர்


திருப்பூரில் தொழிலாளர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 2 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணி நடக்கிறது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறினார்.

தவறான செய்தி

திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருப்பூர் மாநகரில் தமிழர்களை வடஇந்திய தொழிலாளர்கள் தாக்கியதாக தவறான செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் முற்றிலும் உண்மையில்லை. இரு தனிநபர்களுக்கு இடையே டீக்கடையில் ஏற்பட்ட பிரச்சினை. டீ சாப்பிடும்போது அங்கிருந்த 2 பேர் சிகரெட் புகை ஊதியதில் ஏற்பட்ட பிரச்சினை. இருதரப்பை சேர்ந்தவர்களும் சேர்ந்து வந்துள்ளனர். தனிப்பட்ட பிரச்சினை. 2 வாரத்துக்கு முன் நடந்த சம்பவம்.

இந்த பிரச்சினையில் யாருக்கும் காயம், பாதிப்பு இல்லை. இதுசம்பந்தமாக யாரும் போலீசில் புகார் தெரிவிக்கவில்லை. எதேச்சையாக நடந்த சம்பவம். தொழில் போட்டிக்காகவோ, வேலைவாய்ப்புக்காகவோ, வேறு முன்விரோதம் காரணமாகவோ நடந்த பிரச்சினை இல்லை. இதை பெரிதாக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இந்த சம்பவத்தை வேறுமாதிரியாக சித்தரித்து வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பப்படுகிறது. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். இந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பகிர வேண்டாம். தவறான நோக்கத்தில் பேசுபவர், பரப்புவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

2 தனிப்படை அமைப்பு

கடந்த 2 வாரத்துக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. தகராறில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொரு தனிப்படை, இந்த சம்பவத்தை சமூகவலைதளங்களில் தவறாக பரப்புவோர், தவறாக சித்தரிப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story