துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியை கைது செய்ய போலீசார் நடவடிக்கை
துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட ரவுடியை புதுக்கோட்டையில் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர்.
கொலை வழக்கு
திருச்சியில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடிகள் துரை, சோமு ஆகியோரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் பிடிபட்ட துரை பிரபல ரவுடி ஆவார். அவர் மீது புதுக்கோட்டையில் ஒரு கொலை வழக்கு உள்ளது. அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்தவர் இளவரசன் (வயது 30). இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. இவர் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாதம் 12-ந் தேதி புதுக்கோட்டையில் ஒரு வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திட்டு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது புதுக்குளம் அருகே மர்மகும்பல் இளவரசனை வெட்டி சாய்த்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திட்டம் தீட்டினார்
போலீசார் விசாரணையில் இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதில் 7 பேரை அடுத்தடுத்து கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக திருச்சியை சேர்ந்த ரவுடி துரை, தஞ்சாவூரை சேர்ந்த குஜிலி ராஜா மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவரசன் கொலை வழக்கில் இதுவரை இவர்கள் 2 பேரும் கைது செய்யப்படவில்லை. இளவரசனை கொலை செய்ய திட்டம் போட்டதே ரவுடி துரை என்பது கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தில் தெரியவந்தது.
திருச்சி மத்திய சிறையில் ரவுடி துரைக்கும், மற்றொரு ரவுடியான பொன்மலையை சேர்ந்த அடைமொழியுடன் பெயருடையவருக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் அடைமொழி பெயருடன் கூடிய ரவுடியை சரமாரி தாக்கியிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் ரவுடி துரையை கொலை செய்ய அந்த ரவுடி திட்டம் தீட்டினார். இதில் இளவரசன் மூலம் ரவுடி துரையை கொலை செய்ய ஏற்பாடு நடந்திருக்கிறது. இந்த விவரம் ரவுடி துரையின் காதிற்கு எட்டவே முந்திக்கொண்டு இளவரசனை திட்டம் போட்டு தனது ஆட்கள் மூலம் கொலை செய்துள்ளார்.
கைதுக்கு நடவடிக்கை
இந்த வழக்கில் ரவுடி துரை தலைமறைவாக இருந்த நிலையில் இன்று திருச்சியில் துப்பாக்கியால் போலீசார் சுட்டுபிடித்ததில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை இளவரசன் கொலை வழக்கில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனு அளித்து அதன்பின் `பார்மல் அரெஸ்ட்' மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். மற்றொரு ரவுடியான தஞ்சாவூரை சேர்ந்த குஜிலி ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.