ஏ.டி.எம்.கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம்


ஏ.டி.எம்.கொள்ளை சம்பவத்தில் மேலும் 2 பேரை கைது செய்ய போலீசார் தீவிரம்
x

திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூரில் நடந்த ஏ.டி.எம்.கொள்ளையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிைலயில் மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூரில் நடந்த ஏ.டி.எம்.கொள்ளையில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்ட நிைலயில் மேலும் 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

7 பேர் கைது

திருவண்ணாமலை, கலசபாக்கம், போளூர் ஆகிய பகுதிகளில் உள்ள 4 ஏ.டி.எம். மையங்களில் கியாஸ் கட்டிங் எந்திரத்தை பயன்படுத்தி பணம் எடுக்கும் எந்திரங்களை உடைத்து அதில் இருந்த ரூ.72 லட்சத்து 79 ஆயிரத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

தமிழகத்தையே உலுக்கிய இந்தசம்பவம் குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி மேற்பார்வையில் 5 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனிப்படை போலீசார் கர்நாடகா, அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமதுஆரிப் (வயது 35), புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆசாத் (37), கர்நாடகா மாநிலம் கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ்பாஷா (43), அசாம் மாநிலம் லாலாப்பூர் பகுதியை சேர்ந்த அஷ்ரப் உசேன் (26), நிஜாமுதீன் (28), ராஜஸ்தான் மாநிலம் திஜாரா தாலுகா ஜவாத்திகுர்த் கிராமத்தை சேர்ந்த சிராஜூதின் (50), அரியானா மாநிலம் நூ மாவட்டம் பிரோஜ் பூர் நவ்லி கிராமத்தை சேர்ந்த வாஹித் (36) ஆகிய 7 பேரை கைது செய்தனர்.

புரியாத புதிராக உள்ளது

இவர்களில் இறுதியாக நேற்று முன்தினம் வாஹித் என்பவர் கைது செய்யப்பட்டார். ஏ.டி.எம். மையத்தில் உள்ள பணம் எடுக்கும் எந்திரங்களில் கியாஸ் கட்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டியது வாஹித் தான் என்பது தெரியவந்து உள்ளது. மேலும் இவர் மீது உத்தரபிரதேசத்தில் ஏ.டி.எம்மை உடைத்து கொள்ளையடித்த வழக்கில் சிறைக்கு சென்றவர் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறுகையில், ''ஏ.டி.எம். மையங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் 2 பேரை தேடி வருகின்றோம். விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவார்கள். ஏ.டி.எம். மையங்களில் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் கன்டெய்னர் லாரி மூலம் அரியானாவில் இருந்து கியாஸ் வெல்டிங் எந்திரத்தை கொண்டு வந்து பின்னர் அதை காரிற்கு மாற்றி கொள்ளையடித்து உள்ளனர்.

பின்னர் அவர்கள் மீண்டும் கன்டெய்னர் லாரியின் மூலம் அரியானாவிற்கு தப்பி சென்று உள்ளனர். மேலும் கொள்ளையர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை ஏன் கொள்ளையடிக்க தேர்வு செய்தனர் என்பது புரியாத புதிராகவே உள்ளது. மேலும் 2 பேரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் தான் அதற்கான விடை தெரியும். கைதான பின்னர்தான் அவர்களிடம் இருந்து பணமும் பறிமுதல் செய்யப்படும்'' என்றார்.


Next Story