சென்னை: பிரபல ஓட்டலில் கள்ளச்சாவி போட்டு கொள்ளை - மேலாளர் உட்பட 2 பேர் கைது


சென்னை: பிரபல ஓட்டலில் கள்ளச்சாவி போட்டு கொள்ளை - மேலாளர் உட்பட 2 பேர் கைது
x

கைது செய்யப்பட்ட மேலாளர் சிவகுமார் மற்றும் கார் டிரைவர் ராசுக்குட்டி

சாலிகிராமத்தில் உள்ள பிரபல ஓட்டலில் கள்ளச்சாவி போட்டு கொள்ளையடித்த மேலாளர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

சென்னை, சாலிகிராமம், அருணாசலம் சாலையில் பிரபல நிறுவனத்தின் (ஸ்ரீ குப்தா பவன்) ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த மாதம் 24-ந் தேதி அதிகாலை 5 மணி அளவில் ஊழியர்கள் வழக்கம் போல கடையை திறந்தனர். அப்போது ரூ. 54 ஆயிரம் பணத்துடன் 61 கிலோ எடை கொண்ட லாக்கர் மற்றும் கேமரா டி.வி. மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கடையின் மேலாளர் அமர்பால் விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தலைமறைவான மர்ம நபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இதில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு கிருஷ்ணகிரியை சேர்ந்த சிவகுமார் (33) கார் டிரைவர் ராசுக்குட்டி என்கிற ராஜி (27) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே நிறுவனத்தின் மேற்கு முகப்பேர் கிளையின் மேலாளராக வேலை பார்த்து வரும் சிவகுமார் ஏற்கனவே சாலிகிராமம் கிளையில் பணியில் இருந்துள்ளார். அப்போது தன்னிடம் இருந்த கடையின் ஷட்டர் மற்றும் முன்பக்க கண்ணாடி கதவுக்கான சாவிகளுக்கு கள்ளச்சாவி போட்டு தயாராக வைத்துள்ளார்.

மேலும் வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களில் ரூ.3 லட்சம் வரை விற்பனை நடக்கும். அதை லாக்கரில் வைத்து திங்கட்கிழமை வங்கியில் செலுத்துவது வழக்கம்.

இதைப்பற்றி நன்கு அறிந்த சிவகுமார் சம்பவத்தன்று காரில் வந்து கள்ளச்சாவி போட்டு கடையை திறந்து கைவரிசை காட்டி லாக்கரை தூக்கி சென்றுள்ளார். ஆனால் ஆன்லைன் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் அதிகளவில் விற்பனை நடந்ததால் ரூ. 54 ஆயிரம் மட்டுமே லாக்கரில் இருந்ததால் ஏமாற்றம் அடைந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Next Story