தாரமங்கலம் அருகேசாலை மறியலில் ஈடுபட்ட 45 பேர் கைது
தாரமங்கலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாரமங்கலம்,
குடிநீர் தொட்டி
தாரமங்கலம் அருகே உள்ள ராமிரெட்டிப்பட்டி ஆயாமரம் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 54). இவருடைய விவசாய நிலத்திற்கு அருகே அரசுக்கு சொந்தமான 2 சென்ட் நிலத்தில் குடிநீர் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னதம்பி குடும்பத்தினர் அந்த நிலத்தை கம்பி வேலியால் அடைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று மதியம் தாரமங்கலத்தில் இருந்து ஜலகண்டாபுரம் செல்லும் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர்கள் விஜயலட்சுமி, ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.
45 பேர் கைது
அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் பெண்கள் உள்பட 45 பேரை கைது செய்து, தாரமங்கலத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்தனர்.
இந்தநிலையில் ஆணையாளர் விஜயலட்சுமி அரசுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சின்னதம்பி, விஜயா, கார்த்தி, குருநாதசாமி, பெரியம்மாள், ராஜி, தங்கவேல், சரோஜா ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.