வன்முறை நடந்த பகுதிகளில் அமைதி திரும்பியது


வன்முறை நடந்த பகுதிகளில் அமைதி திரும்பியது
x
தினத்தந்தி 4 Feb 2023 12:15 AM IST (Updated: 4 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே வன்முறை நடந்த பகுதிகளில் அமைதி திரும்பியது. அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி

சூளகிரி

சூளகிரி அருகே வன்முறை நடந்த பகுதிகளில் அமைதி திரும்பியது. அங்கு பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வன்முறை

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கோபசந்திரத்தில் நேற்று முன்தினம் எருது விடும் விழா நடத்த அனுமதி தராததால் பொதுமக்கள் கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

இதில் சாலையில் நின்ற 12 அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஜீப், கார்கள் வாகனம் என 30-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் பொதுமக்கள் நடத்திய கல்வீச்சில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர்.

அமைதி திரும்பியது

இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதனால் பெங்களூரு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.

இந்த நிலையில் வன்முறை நடந்த பகுதிகளில் அமைதி திரும்பியது. நேற்று 2-வது நாளாக அங்கு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அமைதி திரும்பியதால் சேலம் சரக டி.ஜ.ஜி., தர்மபுரி, நாமக்கல், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் மீண்டும் அவர்களின் ஊர்களுக்கு திரும்பினர்.

தேடுதல் வேட்டை

இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதற்காக அப்பகுதியில் பதிவான வீடியோ, புகைப்படங்களை வைத்து தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட மோட்டார்சைக்கிள்கள் யாருடையது என்றும், சாலை மறியல் செய்ய முதலில் டிப்பர் லாரியை குறுக்கே நிறுத்திய நபர் யார்? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story