சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட7 பேர் குண்டர் சட்டத்தில் கைது-போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவு


சேலத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.

சேலம்

பாலியல் தொல்லை

சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வினித் (வயது 23). தேக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (21). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த 14 வயதுடைய பள்ளி மாணவியை கடத்தி சென்று, பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும் அவர்களது நண்பர்களான தேக்கம்பட்டியை சேர்ந்த ஆகாஷ் (19), சீனிவாசன் (23), அருள்குமார் (23) ஆகியோரும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.

இதுகுறித்து வெளியே சொல்லக்கூடாது என்று அந்த மாணவிக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். இதுதொடர்பாக சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன், அருள்குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

சேலம் கோவிந்தகவுண்டர் தோட்டம் காட்டுவளவை சேர்ந்த சின்னவர், கடந்த மாதம் கிச்சிப்பாளையம்எஸ்.எம்.சி. காலனியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி (22), பிரபு (24) ஆகியோர் அவரை வழிமறித்து, பணம் கேட்டு இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் அவர்கள் கத்திமுனையில் ரமேஷ் என்பவரிடம் ரூ.4 ஆயிரத்தை பறித்து சென்றனர். இதுதொடர்பான புகார்களின் பேரில் கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி துரைசாமி, பிரபு ஆகியோரை கைது செய்தனர்.

இந்தநிலையில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட வினித், விக்னேஷ், ஆகாஷ், சீனிவாசன், அருள்குமார், துரைசாமி, பிரபு ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கோரி மாநகர போலீஸ் கமிஷனருக்கு துணை கமிஷனர்கள் கவுதம் கோயல், லாவண்யா ஆகியோர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில் அவர்கள் 7 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். இதற்கான ஆணை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரிடமும் வழங்கப்பட்டது.


Next Story