சாதுக்களிடம் போலீசார் திடீர் சோதனை
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிரிவலப்பாதையில் திடீர் சோதனை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் தங்கி வசித்து வருகின்றனர்.
சமீப நாட்களாக சாதுக்கள் போர்வையில் உள்ள சில நபர்கள் கஞ்சா, சாராயம் அருந்தி விட்டு தகராறில் ஈடுபடுவது, கிரிவலம் செல்லும் பக்தர்களை தகாத வார்த்தைகளால் திட்டுவது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அதனால் கிரிவலப்பாதையில் சாதுக்களை முறைப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் கிரிவலப்பாதையில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
அப்போது கிரிவலப்பாதையில் தங்கியுள்ள சாதுக்களிடம் அடையாள அட்டை உள்ளதா?, தேவையற்ற நபர்கள் மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்கள் எவரேனும் தங்கியுள்ளனரா? என்று கேட்டறிந்தனர்.
மேலும் எவரேனும் போதை வஸ்து பொருட்கள் வைத்து உள்ளனரா? என்று சாதுக்களின் உடைமைகளையும் சோதனை செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், சாதுக்கள் போர்வையில் தேவையற்ற நபர்கள் கிரிவலப்பாதையில் தங்குவதை கண்காணிக்கும் வகையிலும், போதை வஸ்து பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், அடையாள அட்டை இல்லாத உண்மையான சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவது தொடர்பாகவும் சோதனை செய்யப்பட்டது.
மேலும் சாதுக்கள் போன்று தேவையற்ற நபர்கள் எவரேனும் கிரிவலப்பாதையில் தங்கியிருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கிரிவலப்பாதையில் சாதுக்களிடம் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையால் திருவண்ணாமலை பரபரப்பு ஏற்பட்டது.