தேனி உள்பட 4 நகரங்களில் பலப்படுத்தப்பட்ட இருசக்கர வாகன ரோந்து படை


தேனி உள்பட 4 நகரங்களில் பலப்படுத்தப்பட்ட இருசக்கர வாகன ரோந்து படை
x
தினத்தந்தி 17 Dec 2022 8:32 PM IST (Updated: 17 Dec 2022 10:01 PM IST)
t-max-icont-min-icon

தேனி உள்பட 4 நகரங்களில் பலப்படுத்தப்பட்ட இருசக்கர வாகன ரோந்து படையின் செயல்பாட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.

தேனி

தேனி உள்பட 4 நகரங்களில் பலப்படுத்தப்பட்ட இருசக்கர வாகன ரோந்து படையின் செயல்பாட்டை மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தொடங்கி வைத்தார்.

வாகன ரோந்து படை

தேனி மாவட்டத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் இருசக்கர வாகன ரோந்து படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு மோட்டார் சைக்கிளுக்கும் தலா 2 போலீசார் வீதம் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் மாவட்டத்தில் இந்த இருசக்கர வாகன ரோந்து படை பலப்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக தேனி, போடி, கம்பம், உத்தமபாளையம் ஆகிய 4 நகர பகுதிகளில் இந்த ரோந்து படை பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இந்த நகரங்களில் தலா 3 ரோந்து படைகள் வீதம் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படையிலும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் தலா 3 போலீசார் வீதம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர் கண்காணிப்பு

ஒவ்வொரு நகர பகுதியும் 3 பகுதியாக பிரிக்கப்பட்டு, அந்தந்த பகுதிகளுக்கு நியமிக்கப்பட்ட ரோந்து படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். இந்த பலப்படுத்தப்பட்ட இருசக்கர வாகன ரோந்து படையினரின் ரோந்து பணி தொடக்க நிகழ்ச்சி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று நடந்தது.

மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கி ரோந்து படையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

இந்த ரோந்து படையினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். விபத்து, சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்துக்கு செல்ல வேண்டும். பழைய குற்றவாளிகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். சந்தேக நபர்களின் நடவடிக்கைகள், கஞ்சா, புகையிலை, மதுவிற்பனை போன்ற சட்டவிரோத செயல்கள் செய்பவர்களை கண்டறிந்து அதுகுறித்த தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கினர்.


Related Tags :
Next Story