போலீஸ்காரரின் செல்போனை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது
மதுரையில் வாகன சோதனையில் தகராறு ஏற்பட்டபோது போலீஸ்காரரின் செல்போனை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை
மதுரையில் வாகன சோதனையில் தகராறு ஏற்பட்டபோது போலீஸ்காரரின் செல்போனை பறித்துவிட்டு தப்பியோடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தகராறு
மதுரை மாநகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் சின்ன கருத்தபாண்டி. நேற்று முன்தினம் இவர் ஏட்டு ஆல்வின் ஜெபஸ்டினுடன் தல்லாகுளம் வணிக வளாகம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் அந்த வழியாக வந்தனர். அவர்களில் வண்டியை ஓட்டி வந்தவர் தலைகவசம் (ஹெல்மேட்) அணியவில்லை என்பதால் போலீசார் அவரை நிறுத்தினார்கள். அப்போது அந்த வண்டியில் வழக்கறிஞர் என்பதை குறிக்கும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் சின்ன கருத்தபாண்டி தலைகவசம் அணியாமல் வந்தததால் அபராதம் விதிக்க வேண்டும் என்று கூறினார்.
அதற்கு அந்த நபர் தான் வழக்கறிஞர் என்பதை அறிந்தும், எப்படி வண்டியை நிறுத்தலாம் என்று தகராறு செய்தார். உடனே சப்-இன்ஸ்பெக்டர் அவரிடம் பார் கவுன்சிலில் அங்கீகாரம் அளித்த அடையாள அட்டை மற்றும் வண்டியின் ஆவணங்களை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். அதற்குள் அந்த நபருக்கும், போலீஸ் ஏட்டுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
போலீசாரை மிரட்டியவர் கைது
அந்த நேரத்தில் அந்த நபர் பலருக்கு போன் மூலம் பேச தொடங்கினார். எனவே போலீஸ் ஏட்டு ஆல்வின் ஜெபஸ்டின், அந்த சம்பவத்தை அவரது செல்போனில் படம் எடுக்க தொடங்கினார். அதற்கு அந்த நபர் எதிர்ப்பு தெரிவித்து அவரை மிரட்ட தொடங்கினார். ஒரு கட்டத்தில் போலீசாரிடமிருந்த செல்போனை பறித்து கொண்டு அந்த நபர் அங்கிருந்து சென்றார். அதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று அந்த நபரை பிடித்து விசாரித்தார்.
அதில் அந்த நபர் வக்கீல் இல்லை என்பதும், வக்கீல் நண்பர் ஒருவரின் வண்டியை இரவல் வாங்கி வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் யானைக்கல் பகுதியை சேர்ந்த வசந்த்(வயது 20), சுமைதூக்கும் தொழிலாளி என்பதும், அவருடன் வந்த நபர் 18 வயதிற்குட்பட்ட சிறுவன் என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து தல்லாகுளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசாருக்கு மிரட்டல் விடுத்தல், போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தாக கூறி வழக்குப்பதிவு செய்து வசந்த்தை கைது செய்தனர்.