காந்திகிராம பல்கலைக்கழகத்தில் போலீஸ் ஐ.ஜி.ஆய்வு
பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதையொட்டி காந்திகிராம பல்கலைக்கழகத்தில் போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்லை அடுத்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா, வருகிற 11-ந்தேதி நடைபெறுகிறது. காந்திகிராம பல்கலைக்கழக பல்நோக்கு அரங்கில் நடைபெறும் இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தர் அண்ணாமலை தலைமை தாங்குகிறார். துணைவேந்தர் குர்மித்சிங் வரவேற்று பேசுகிறார்.
இதையொட்டி காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். இதனையடுத்து அம்பாத்துரை ரெயில் நிலையம் அருகே ஹெலிகாப்டர் இறங்குதளம் புதுப்பிக்கும் பணி முழுவீச்சாக நடந்து வருகிறது. இங்கு தூப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று காலை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து மாலையில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி.அஸ்ரா கார்க், டி.ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் ஹெலிகாப்டர் இறங்கு தளம் மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மித் சிங், பதிவாளர் வி.பி.ஆர்.சிவக்குமார் ஆகியோருடன் கலெக்டர் விசாகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.