லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை
லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
போலீஸ் இன்ஸ்பெக்டர்
தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் கடந்த 2011-ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் சிவக்குமார். இவருக்கு தற்போது வயது 55. இவருடைய சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஆகும்.
இவர் தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாட்டை சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம் மகன் ஜெயக்குமாருக்கும்(35), அவருடைய உறவினர்களுக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
லஞ்சம் வாங்கியபோது கைது
இந்த வழக்கில் ஜெயக்குமாருக்கு சாதமாக செயல்பட ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
அதன்படி முதலில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கொடுத்தபோது, அப்போதைய லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ரெங்கராஜன் தலைமையிலான போலீசார் கையும், களவுமாக பிடித்து சிவக்குமாரை கைது செய்தனர்.
2 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு கும்பகோணம் தலைமை குற்றவியல் நீதித்துறை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை நீதிபதி சண்முகப்பிரியா விசாரித்து இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 1 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு வக்கீல் முகமது இஸ்மாயில் ஆஜராகி வாதாடினார்.