கடலூரில் அழுகிய நிலையில் தூக்கில் வாலிபர் பிணம் போலீசார் விசாரணை
கடலூரில் பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் வண்ணாரப்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 27). இவர் கடலூரில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், பாலசுப்பிரமணியனின் தாய் புதுச்சேரியில் உள்ள மூத்த மகன் வீட்டில் தங்கியிருந்தார். இதனால் பாலசுப்பிரமணியன் கடலூரில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பாலசுப்பிரமணியனை பார்க்க அவரது நண்பர் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பாலசுப்பிரமணியன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது.
கடன் பிரச்சினையா?
இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் தேவனாம்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பாலசுப்பிரமணியன் உடலை கைப்பற்றி அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்றும், இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியன் கடன் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.