திருக்கோவிலூர் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை போலீசார் விசாரணை
திருக்கோவிலூர் அருகே புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 25). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் சி.பெரும்புதூர் கரசங்கால் கிராமத்தை சேர்ந்த அனிதாராணி(21) என்பவரை காதலித்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டை அருகே உள்ள சித்தப்பட்டினம் கிராமத்தில் வாடகைக்கு ஒரு வீடு எடுத்து குடியிருந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 8-ம் தேதி அனிதா ராணி விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அனிதா ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மணலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிதா ராணி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.