மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்பு


மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 27 Jan 2023 12:45 AM IST (Updated: 27 Jan 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாகப்பட்டினம்

கீழ்வேளூர் அருகே மாயமான கட்டிட தொழிலாளி பிணமாக மீட்கப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கட்டிட தொழிலாளி

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி ஊராட்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் மகன் மாதவன் (வயது36). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய தாய் இறந்து விட்டார். இதனால் மாதவன் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 11-ந் தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி திருக்கண்ணங்குடி ஊராட்சி தீபாம்பாள்புரம் வடிகால் வாய்க்கால் மதகு பகுதியில் துர்நாற்றம் வீசியது.

பிணமாக கிடந்தார்

இதனால் சந்தேகம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மதகு அருகில் சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து பொதுமக்கள், கீழ்வேளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிணமாக கிடந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மாயமான மாதவன் என்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எப்படி இறந்தார்? கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story