தளியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலைகோர்ட்டில் சரணடைந்த 8 பேரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டை
தளியில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் கோர்ட்டில் சரணடைந்த 8 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை
தேன்கனிக்கோட்டையில் ஓசூர் சாந்தி நகரை சேர்ந்தவர் கேசவன் (வயது 51). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கடந்த 19-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்றபோதுகாரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை தொடர்பாக தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி, தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை தொடர்பாக கொத்தூரை சேர்ந்த மோகன்குமார்( 29), பண்டேஸ்வரத்தை சேர்ந்த ஜலபதி (31), பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த நாகராஜூ (35), அபிநந்தா (30), அலேநத்தத்தை சேர்ந்த சிவக்குமார் (24), ஸ்ரீநாத் (23), முனிராஜ் ( 33), கர்நாடகா மாநிலம் சிக்பல்லாபூர் அருகே உள்ள செட்டியள்ளி பகுதியை சேர்ந்த மஞ்சுநாதரெட்டி (32), ஆகிய 8 பேர் வேலூர் கோர்ட்டில் கடந்த 21-ந் தேதி சரணடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
போலீசார் தீவிர விசாரணை
இதையடுத்து அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க தளி போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, 8 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் 8 பேரையும் தனி இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.