தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை


தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி

ஊட்டி

பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்று தங்கும் விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கும் விடுதிகள்

நீலகிரி சர்வதேச சுற்றுலா தலமாக இருப்பதால் ஆண்டுதோறும் சுமார் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் விவசாயத்திற்கு அடுத்தபடியாக சுற்றுலா தொழிலை நம்பி ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் தங்கி செல்லும் வகையில், நட்சத்திர ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் பல உள்ளன.

இந்த நிலையில் சில நேரங்களில் வெளி மாநிலங்கள் அல்லது வெளிமாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மலைப்பிரதேசமான ஊட்டிக்கு வந்து விடுகின்றனர். அவர்களும் சுற்றுலா பயணிகள் போர்வையில் தங்கும் விடுதிகளில் தங்கி கொள்கின்றனர்.

பதுங்கும் குற்றவாளிகள்

சமீபத்தில் கோவை கோர்ட்டு வளாகத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களும் ஊட்டிக்கு வந்து போலீசாரிடம் சிக்கினர். எனவே குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கிலும், பிற மாவட்டங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தப்பி வந்து பதுங்குபவர்களை பிடிக்கும் நோக்கிலும் தங்கும் விடுதிகளில் தங்கி இருப்பவர்களின் முழு விவரங்களை சேகரிக்க உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த உத்தரவு முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று ஊட்டியில் உள்ள விடுதிகளில் போலீசார் திடீர் சோதனை செய்து வருகின்றனர். இதனால் ஊட்டியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

தீவிர கண்காணிப்பு

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சுற்றுலா பயணிகளிடம் இருந்து உண்மையான முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் சேகரித்து, அவர்கள் தரும் தகவல்கள் உண்மை தானா என்பதை உறுதிப்படுத்தி பதிவு செய்து பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும். உரிய ஆவணங்களை சேகரித்து வைத்திருக்க வேண்டும். எவ்வளவு அறைகள் நிரம்பியுள்ளன?, வெளி மாநில அல்லது வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் பெயர்களின் விவரங்களை தனியாக தினந்தோறும் போலீஸ் நிலையத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் ஜோடியாக வருபவர்களுக்கு 18 வயது பூர்த்தியாகி உள்ளதா என்பதை சரியாக ஆவணங்கள் மூலம் கவனிக்க வேண்டும். இதை கடைபிடிக்கிறார்களா என்று தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story