சிறுமி கடத்தல் வழக்கில் போலீசார் அலட்சியம்


சிறுமி கடத்தல் வழக்கில் போலீசார் அலட்சியம்
x

சிறுமி கடத்தல் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக சிறுமியின் தந்தை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார்

தேனி

தேனி மாவட்டம், ராஜதானி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக்கிடம் அவர் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில், "எனது 17 வயது மகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் கடந்த 29-ந்தேதி கடத்திச் சென்றார். இதுகுறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இந்நிலையில் கடத்திச் சென்ற நபரே ராஜதானி போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோவில் வந்து எனது மகளை இறக்கி விட்டுச் சென்று விட்டார். ஆனால், கடத்திய நபர் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவருக்கு சாதகமாகவே நடந்து வருகின்றனர். எனது மகளை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 3 நாட்களாக அனுமதித்துள்ள நிலையில், மருத்துவ பரிசோதனை செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக தெரிகிறது. எனவே எனது மகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதுடன், அவரை கடத்திச் சென்ற நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு சட்டப்படி தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஆண்டிப்பட்டி துணை சூப்பிரண்டு ராமலிங்கத்துக்கு கூடுதல் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார்.


Next Story