இந்து அமைப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
இந்து அமைப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம்
உடுமலை
உடுமலையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகளை நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறை குறித்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன், ஆர்.டி.ஓ. தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் உடுமலை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ.ஆர். ஜஸ்வந்த்கண்ணன் தலைமை தாங்கி பேசினார்.
துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்.தேன்மொழிவேல், ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் விவேகானந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.ஏ.பி.பொறியாளர், மின் வாரிய பொறியாளர், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை அலுவலர், இந்து முன்னணி, இந்துசாம்ராஜ்யம் உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
வழிமுறைகள்
கூட்டத்தில் ஆர்.டி.ஓ. ஆர்.ஜஸ்வந்த்கண்ணன் பேசியதாவது:- விநாயகர் சிலை அமைப்பாளர்கள், சிலைகளை அமைப்பதற்கு அந்தந்த காவல் நிலையங்கள் மற்றும் ஆர்.டி.ஓ.விடம் உரிய அனுமதி பெற வேண்டும். சிலைகள், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் களி மண்ணால் ஆனதாக இருக்க வேண்டும். சிலைகளுக்கு நீர் நிலைகளை மாசு படுத்தாத இயற்கை வர்ணங்கள் மட்டுமே பூசப்பட்டிருக்க வேண்டும். ரசாயன வர்ணபூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்றவற்றால் ஆன சிலைகளைப் பயன்படுத்தக்கூடாது.
பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம் பீடம் மற்றும் மேடையுடன் சேர்த்து அதிகபட்சம் 10 அடிக்கும் மேலாக இருக்கக்கூடாது. விநாயகர் சிலை நிறுவப்படும் இடங்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு மேற்கூரை மற்றும் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கக்கூடாது.
பொறுப்பாளர்கள் நியமிப்பு
இதர மத வழிபாட்டு தலங்கள், கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றின் அருகில் சிலைகளை நிறுவுதல் கூடாது. சிலைகளை வைக்கும் அமைப்பினர் ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரமும் சிலையின் பாதுகாப்பிற்கு பொறுப்பு ஏற்கும் வகையில் பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும். ஊர்வலத்தில் பங்கேற்கும் சிலைகள், போலீசார் அனுமதியளிக்கப்பட்ட பாதையில் தான் செல்லவேண்டும்.
ஊர்வலத்தின் போது போலீசார் அனுமதி மறுக்கப்பட்ட இடங்கள் வழியாக எந்த காரணத்தை கொண்டும் ஊர்வலம் செல்லக்கூடாது. தவறும் பட்சத்தில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஊர்வலத்தில் பட்டாசு, வெடிகள் போன்றவைகளை உபயோகிக்கக் கூடாது.
கோஷமிடக்கூடாது
ஊர்வலத்தின் போது பிற மதத்தினரைக்குறிப்பிட்டோ, அல்லது மற்றவர்களது மனம் புண்படும்படியோ கோஷமிடக்கூடாது. கரைப்பதற்காக விநாயகர்சிலைகளை 4 சக்கர வாகனங்களான மினிலாரி, டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே எடுத்துச்செல்ல வேண்டும். மாட்டு வண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் சிலைகளை எடுத்துச்செல்லக்கூடாது. மேற்கண்டவாறு ஆர்.டி.ஓ.பேசினார்.