ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்த போலீசார்


ஆதரவற்ற பெண்ணின் உடலை அடக்கம் செய்த போலீசார்
x

அம்மாப்பேட்டையில் ஆதரவற்ற பெண்ணின் உடலை போலீசார் அடக்கம் செய்தனர்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டையில் ஆதரவற்ற பெண்ணின் உடலை போலீசார் அடக்கம் செய்தனர்.

பலத்த காயங்களுடன் கிடந்த மூதாட்டி

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புலவர் நத்தம் பெட்ரோல் பங்க் எதிரில் சம்பவத்தன்று 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், புலவர் நத்தம் கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) ஜெகதீசன் அம்மாப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்ேபரில் போலீசார் படுகாயங்களுடன் மயங்கி கிடந்த மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

அந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் அந்த மூதாட்டியை தேடி யாரும் வரவில்லை.

உடல் அடக்கம்

இதையடுத்து போலீசார் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மூதாட்டியின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் அம்மாப்பேட்டைக்கு கொண்டு வந்தனர். பின்னர் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி, அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகார்சோழன் ஆகியோர் முன்னிலையில், சப்-இன்ஸ்பெக்டர் சேகரன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் பாலதண்டாயுதபாணி மற்றும் போலீசார் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்து, இறுதி அஞ்சலி செலுத்தினர். காவல் பணியை கடந்து, மனிதாபிமானத்துடன் அம்மாப்பேட்டை போலீசார் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ததை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.


Next Story