மாவட்டத்தில் போலீசார் தீவிர ரோந்து
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதையொட்டி நெல்லை மாநகர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தடை
தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதை எதிர்த்து பல்வேறு அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு
நெல்லை மாவட்டத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நெல்லை மேலப்பாளையத்தில் மாநகர கிழக்கு பகுதி துணை கமிஷனர் சீனிவாசன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கவச உடை அணிந்த அதிரடிப்படை போலீசார் அங்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் வஜ்ரா வாகனங்களும் கொண்டு வரப்பட்டுள்ளது. நெல்லை வண்ணார்பேட்டை, பேட்டை, பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் வாகனங்களில் ரோந்து வந்தபடியே உள்ளனர்.
மாவட்டத்தில்...
இதேபோல் பத்தமடை, ஏர்வாடி உள்ளிட்ட இடங்களிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுதொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ் குமார் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டது குறித்து யாரும் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம், என அறிவுறுத்தி உள்ளார்.
போலீஸ் விசாரணை
இந்தநிலையில் நாகர்கோவில் குளச்சல் பகுதியில் பா. ஜனதா பிரமுகர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த வாலிபருக்கு தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நாங்குநேரி சுங்கச்சாவடி மற்றும் பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆஸ்ரா கார்க், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் ஆகியோர் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.