தர்மபுரியில்2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வு 828 பேர் தேர்ச்சி
தர்மபுரியில் 5 நாட்கள் நடந்த 2-ம் நிலை காவலர் பணிக்கான உடற்தகுதி தேர்வில் 828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
உடற்தகுதி தேர்வு
தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 2-ம் நிலை காவலர் மற்றும் தமிழ்நாடு தீயணைப்பு துறையில் காலியாக உள்ள தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களை பூர்த்தி செய்யும் வகையில் எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாநிலம் முழுவதும் உடற்தகுதி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
அதன்படி தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் 5 நாட்கள் நடைபெற்ற உடற்தகுதி தேர்வில் பங்கேற்க தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து 1,138 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களின் சான்றிதழ்கள் சரி பார்க்கப்பட்டது. முதற்கட்டமாக தேர்வாளர்களின் உயரம், மார்பளவு சரிபார்த்தல் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடைபெற்றன. இதில் பங்கேற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
828 பேர் தேர்ச்சி
முதற்கட்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 2-ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 100 அல்லது 400 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடத்தப்பட்டன. இந்த தேர்வை சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி முன்னிலையில் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அண்ணாமலை, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சிந்து, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
5 நாட்கள் நடைபெற்ற இந்த உடற்தகுதி தேர்வின் முடிவில் 828 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 128 பேர் தேர்ச்சி பெறவில்லை. 182 பேர் உடற்தகுதி தேர்வுகளில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.