மனநலம் பாதித்த முதியவரை காப்பகத்தில் சேர்த்த போலீசார்
பழனியில் மனநலம் பாதித்த முதியவரை காப்பகத்தில் போலீசார் சேர்த்தனர்.
பழனி அடிவாரம் மதனபுரம் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சாலையோரத்தில் தங்கி வந்தார். சரியான உணவு, உடையின்றி தவித்து வந்தார். மேலும் கையில் காயத்துடனும் கடும் அவதி அடைந்து வந்தார். இதையடுத்து அந்த முதியவரை காப்பகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து அறிந்த பழனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரி மற்றும் போலீசார் சுகப்பிரியா, ஆனந்த், அகிலா ஆகியோர் அந்த முதியவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்தனர். அதைத்தொடர்ந்து போலீசார் அந்த முதியவரை மீட்டு பழனி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவருக்கு புத்தாடை அணிவித்து பழனி பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். போலீசாரின் மனிதாபிமான செயலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை பாராட்டினர்.