கயத்தாறு சுங்கச்சாவடி அருகே போலீசார் சோதனை:கன்டெய்னர் லாரியில் ரகசிய அறையில் பதுக்கிய ரூ.60 லட்சம் கஞ்சா சிக்கியது
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே போலீசார் நடத்திய சோதனையில் கன்டெய்னர் லாரியில் ரகசிய அறையில் பதுக்கிய ரூ.60 லட்சம் கஞ்சா சிக்கியது. இது தொடர்பாக மதபோதகர் உள்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டனர்.
கோவில்பட்டி:
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே கன்டெய்னர் லாரியில் ரகசிய அறையில் பதுக்கிய ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மதபோதகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நேற்று கோவில்பட்டியை அடுத்த கயத்தாறு சுங்கச்சாவடி அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், ராஜபிரபு, பிரெட்ரிக் ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த கன்டெய்னர் லாரியை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.
ரகசிய அறை
அதில் இருந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கன்டெய்னரை திறந்து சோதனை செய்தனர். அப்போது கன்டெய்னரின் மேல் பகுதியில் ஒரு ரகசிய அறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதை திறந்து பார்த்த போது அங்கு ஏராளமான பிளாஸ்டிக் பைகள் கட்டுப்பட்டு இருந்தது. அதை திறந்த போது, அனைத்தும் கஞ்சா என்பது தெரியவந்தது.
ரூ.60 லட்சம் கஞ்சா
கன்டெய்னரில் மொத்தம் 2 கிலோ எடையில் 300 பிளாஸ்டிக் பை பார்சல்களில் 600 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
தூத்துக்குடிக்கு கடத்தல்
அதில், லாரி டிரைவர் புதுச்சேரி ஏனாம் பகுதியைச் சேர்ந்த வெங்கடராவ் மகன் சத்திபாபு (வயது 39), தூத்துக்குடி ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில் பிள்ளைவிளையைச் சேர்ந்த பாலச்சந்தர் மகன் ஜான் அற்புதபாரத் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது.
கஞ்சாவை புதுச்சேரியில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, கஞ்சாவுடன் லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதானவர்களையும், கஞ்சா, லாரி ஆகியவற்றையும் கோவில்பட்டி மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுதொடர்பாக மதுவிலக்கு பிரிவு துணை சூப்பிரண்டு சிவசுப்பு, இன்ஸ்பெக்டர் சாந்தி ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
மதபோதகர்
இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கைதான ஜான் அற்புதபாரத் மதபோதகர் என்பது குறிப்பிடத்தக்கது.
கயத்தாறு சுங்கச்சாவடி அருகே ரூ.60 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.