நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் 'திடீர்' சோதனை


நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் திடீர் சோதனை
x

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர்.

ஆசிரமத்தில் சேவை

பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கடந்த 2017-ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலம் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகள் செய்து வந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு நாகேஷ் அவரது மனைவி மற்றும் மூத்த மகளுடன் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினார். 2-வது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளார். அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது அவர் பிடதி ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் வீடியோ காலில் பேசிய நாகேஷின் 2-வது மகள் தனக்கு ஆசிரமத்தில் இருந்து வெளியேற விருப்பம் இல்லை, அங்கேயே தான் இருக்க போகிறேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டு தருமாறு கர்நாடகா போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகேஷ் புகார் செய்ததாக தெரிகிறது.

சோதனை

ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு ஒரு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடத்தில் தேடி உள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலை கிரிவலப் பாதை அடி அண்ணாமலையில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். அதன்பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி தலைமையிலான போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவி, மூத்த மகளுடன் நேரில் சென்று திடீர் சோதனை நடத்தினர்.அங்கு அவரது மகள் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story