குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் வீடுகளில் போலீசார் அதிரடி ஆய்வு
குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் வீடுகளில் போலீசார் அதிரடி ஆய்வு செய்தனர்.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) பிபின் செல்வ பிரிட்டோ, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சதீஷ்குமார், ரோஜா ஆகியோர் அடங்கிய போலீஸ் குழுவினர் தா.பழூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அவர்களை எந்த சூழ்நிலையிலும் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறு ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனர். ரவுடிகளின் வீடுகளில் ஆய்வு செய்த போலீசார், அவர்களது வீடுகளில் ஏதாவது ஆயுதங்கள் உள்ளதா? என்று சோதனை செய்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் கூறுகையில், தா.பழூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசித்து வரும் ரவுடிகள், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், போதை பொருட்கள் கையாள்பவர்கள் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை வீடு, வீடாக சென்று ஆய்வு செய்து, அவர்களை கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளோம். அவர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மீறி குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள், என்றார்.