ரெயிலில் தவறி விட்ட ரூ.40 ஆயிரம், உடமைகளை போலிசார் மீட்டனர்


ரெயிலில் தவறி விட்ட ரூ.40 ஆயிரம், உடமைகளை போலிசார் மீட்டனர்
x

வடமாநிலத்தை சேர்ந்தவர் ரெயிலில் தவறி விட்ட ரூ.40 ஆயிரம் மற்றும் சூட்கேசுடன் உடமைகளை போலீசார் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர்

ரெயிலில் தவற விட்டார்

மேற்கு வங்காள மாநிலம் பரணகல் பகுதியைச் சேர்ந்தவர் பிமல் (வயது 52). இவர் ஒசூரில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக, சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை கர்நாடக மாநிலம் கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் ஓசூர் செல்வதற்கு அவர் தவறுதலாக பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் ஏறிவிட்டார்.

தவறுதலாக ஏறியதை அறிந்த அவர் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி விட்டார். அவசரமாக இறங்கியதால் தனது சூட்கேஸ், பையில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம ஆகியவற்றை தவற விட்டுவிட்டார். இது குறித்து அவர் உடனடியாக கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் மீட்டனர்

அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார், அந்த ரெயில் ஜோலார்பேட்டை வந்தடைந்ததும் ரெயில் பெட்டியில் இருந்து சூட்கேஸ், பணம் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மீட்டனர்.

பின்னர் உரியவருக்கு தகவல் தெரிவித்து, அவரை வரவழைத்து சூட்கேஸ் மற்றும் பணம் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் பணத்தை மீட்டு கொடுத்த போலிசாருக்கு நன்றி தெரிவித்தார்.


Next Story