குமரியில் 14 இடங்களில் விநாயகர் சிலை வைக்க போலீஸ் அனுமதி மறுப்பு இந்து முன்னணியினர் திரண்டதால் பரபரப்பு
குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் 14 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டதாக இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி இந்து முன்னணி, அகில பாரத இந்து மகா சபா மற்றும் சிவசேனா ஆகிய இந்து அமைப்புகள் சார்பில் கோவில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. முன்னதாக விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக புதிதாக வேறு இடத்தில் சிலைகளை வைக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டது இருந்தது.
இந்தநிலையில் செண்பகராமன்புதூர் முத்துநகரில் நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய இந்து முன்னணி நிர்வாகிகள் தயாரானார்கள். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளாக இங்கு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்றும், எனவே புதிதாக சிலையை பிரதிஷ்டை செய்யக்கூடாது என்றும் போலீசார் கூறினர். இதே போல கணபதிபுரம் பகுதியிலும் ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கண்டனத்துக்குரியது
இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட 2 ஊர்களை சேர்ந்த இளைஞர்கள் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகி காளியப்பன் ஆகியோருடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். இதுபற்றி இந்து முன்னணி மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் கூறியதாவது:-
செண்பகராமன்புதூர் முத்துநகர் பகுதியில் கடந்த 27 ஆண்டுகளாக விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படவில்லை. தற்போது அந்த பகுதியில் மீண்டும் சிலை பிரதிஷ்டை செய்வதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் பிரதிஷ்டை செய்ய மறுத்துள்ளது மிகவும் கண்டனத்துக்குரியது.
14 இடங்களில் அனுமதி மறுப்பு
இதே போல கணபதிபுரத்திலும் சிலை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தக்கலை ஒன்றியத்தில் 4 இடங்களிலும், திருவட்டார் ஒன்றியத்தில் 2 இடங்களிலும், மேல்புறம் ஒன்றியத்தில் 2 இடங்களிலும், குருந்தன்கோடு ஒன்றியத்தில் 2 இடங்களிலும், தோவாளை ஒன்றியத்தில் ஒரு இடத்திலும், பத்மநாபபுரத்தில் ஒரு இடத்திலும் என மொத்தம் 14 இடங்களில் சிலை வைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து இதுதொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இந்து முன்னணியினர் மனு அளித்துவிட்டு புறப்பட்டு சென்றனர். இந்து முன்னணி அமைப்பினர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
---